அவள் உறங்கட்டும்....

10:13 AM Edit This 0 Comments »
கலைந்த கனவுகளின் சாம்பலைக் கண்ணீரில் கரைத்தப்படி -அவள் உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

அவள் கையிலிருக்கும் குட்டி தேவதை கந்தலை ஆடையாக உடுத்தி அவளின் கண்ணீரை மாலையாக தரிக்கிறது.

குட்டி தேவதையின் பாதத்தையும் மட்டுமே மறைக்கும் போர்வையாக புடைவத் துணி.

கலைந்த கூந்தல் தரையில் புரள குட்டி பொம்மையுடன் ஒரு தேவதை உறங்கிக்கொண்டிருக்கிறாள்.

எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால் , இரக்கப்பட்டு கையை நீட்டி அவளை யாரும் எழுப்பாதீர்கள்.

அவளுக்கு அம்மாவின் புடவை அமைதி தரும்போது குளிரின் பெயரால் - உங்கள் 
அழுக்கு போர்வைகளைப் போர்த்தாதீர்கள்.

அவள் கனவிலும் ஆறுதல் சொல்லும் குட்டி தேவதைகளை வாங்கிக்கொண்டு வறட்டுத் தாள்களில் வாழ்க்கையைக கற்பிக்காதீர்கள்.

அவளின் தேவதைக் கதைகளைப் பிடுங்கிக்கொண்டு உங்கள் வேதனைக் கதைகளை கொடுக்காதீர்கள்.

அவளின் கனவு கீதங்களை - உங்கள் கவலைகளின் மொழியால் மொழிபெயர்க்காதீர்கள்.

அவளின் கடவுள் சித்திரங்களை கழிவறைச் சுவர்களில் எழுதாதீ்ர்கள் இரக்கப்பட்டு , கையை நீட்டி அவளை யாரும் எழுப்பாதீர்கள் எழுப்ப எண்ணுவர்களே இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

மார்பு சிதறி இறந்த தாயின் நினைவால் விம்மும் அந்தப் பால்குடி மறவாப் பிள்ளைக்கான ஆறுதல்களை - எந்த நூலில் கோப்பீர்கள்.

எழுந்தவுடன் இது யார் வீடு என கேட்கப்போகும் அவளிடம் இது வேறு நாடு என எப்படி சொல்லபோகிறீர்கள்.

நம்பிக்கை செத்த வீதிகளையும் நாய்களையும் , பிணங்களையும் தாண்டி அழகானா உலகை அவளுக்கு எப்படி காட்டப் போகிறீர்கள்.

அப்பா, அம்மா, துணையின்றி அணியும் ஆடைகளையும் ஆளில்லாமல் ஊட்டிவிடும் அதிசக் கரண்டிகளையும் கண்ணீரைத் துடைக்கும் கனிவான கரங்களையும் எந்தக் கடையில் வாங்கிக் கொடுக்கப்போகிறீர்கள். கரும்பலகைகள் உடைக்கப்பட்டு சவப்பெட்டிகள் செய்யபடும் அவள் நாட்டின் எந்தப்பள்ளியில் அவளை சேர்ப்பதற்காக அவளுக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்.

அழும் தங்கையின் முன்னே சிரித்தப்படி சிதறிய அவள் அண்ணனை நினைவுறத்தாத பள்ளித் தோழர்களை எப்படி நீங்கள் நியமிக்கப் போகீறீர்கள்.

வார நாட்களை எண்ண உதவும் உங்கள் கணக்குகளை வாழ்நாட்களை எண்ணும் அவளுக்கு எதற்கு சொல்லிக் கொடுக்கப்போகிறீ்ர்களோ.

தமிழனென்று சொன்னதற்காக தலையிழந்தவனின் மகளுக்கு , தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று எந்த வாயால் சொல்லிக் கொடுக்கப்போகிறீர்கள்.

நாளையெனும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டு ஒரு வேளை உணவுக்காகப் போராடும் வாழ்வினிலே கோழைகளின் வரலாற்றை அவளுக்கு ஏன் நடத்தப்போகிறீர்கள்.

அனுதினம் வெடிக்கும் தாமிர செல்களிடையே துவங்கப்போகும் வாழ்வுக்காகத்தான் தாவர செல்களை பற்றி - அவள் படிக்கப்போகிறாளா.

இந்த வேற்று நாட்டில் அவளுக்கு - எதை வீட்டுப்பாடமாக கொடுக்கப்போகீறீர்களோ.

அவளை விட்டுவிடுங்கள் உறங்கட்டும்.

விழித்தால் 
தன் நாட்டில் உயிர் வாழ
உரிமை கேட்பாள்
தன் நிர்மூலத்திற்கு நியாயம் கேட்பாள்.


0 கருத்துரைகள்: